பகலிலும்
பௌர்ணமி தேடும்
இருண்ட
சூரியன்களுக்காய்...
ஏதோ ஓர்
இருட்டு மூலையில்
தனக்குத் தானே
மௌன யுத்தம்
நடத்தும்
மனித உயிர்களுக்காய்...
கணினி யுகத்திலும்
கற்கால
வாழ்க்கை நடத்தும்
கண்ணீர்த் துளிகளுக்காய்...
மருத்துவர்களே..!
இறப்பு என்பது
இயல்பு...
தரை விழுந்த
மழை போலவே
மீட்க முடியாதது..!
விட்டு விடுங்கள்...!
ஆனால்,
இருட்டு என்பது???
மொழி இல்லாதவர்கள் கூட
வாழ்ந்து விடலாம்...
விழி இல்லாதவர்கள்??
உலகம்
திறந்து கிடந்தும்,
கற்பனையில்
உருவம் வரைகிறார்கள்
அந்த
கனவு ஓவியர்கள்...!
வானவில்லிற்கு
ஏழு நிறங்களாமே...
இவர்களுக்கு
எந்த வார்த்தைகளால்
எடுத்துச்சொல்வது??
நிறமற்ற
வாழ்க்கைக்கு
வரம் கொடுத்த
இறைவா..!
குற்றம் அறியவே
நெற்றிக்கண் கொண்டாயே...,
இங்கு
முகக் கண்களே
இல்லை...
மூன்றாம் கண்
கொடுப்பாயா...??
இவர்களின்
பாதையில்
இருட்டுக் கம்பளம்
விரித்து விட்டாயே...!
இவர்களின்
கனவுகள் கூட
நெருப்பை
உமிழ்ந்து கொண்டு
கருப்பாய்...கருப்பாய்...!
இறைவனே...
இனியும்
விழியற்ற
உடல்களை செய்வதாய் இருந்தால்
உன் உற்பத்தி
தொழிற்ச்சாலையை
மூடிவிடு...!
அந்த
ஈர இதயக்காரர்களின்
வாழ்க்கை முறை
அறிவாயா??
சுட்டால் பகல்,
குளிர்ந்தால் இரவு,
தொட்டால் மனிதன்,
வருடினால் காற்று...!
தனை வந்து இடித்தால்
உயிருள்ளவை!
தான் போய் இடித்தால்
உயிரற்றவை...!
வேண்டாய் வெறுப்பாய்
கட்டிப்பிடித்தால்
அரசியல் வாதி!
வேகமாய்
மூச்சிழுக்கச் சொன்னால்
கண்டிப்பாய்
அவன் மருத்துவன்...!
விழியில் வடியும்
இருட்டுத் திரவம்
கண்ணீரா குருதியா
எதுவும் தெரியவில்லை...!
மரம் செடி கோடி
வானின் நிறம்
நிலவின் வடிவம்
எதுவும்
அவர்களாய் அறியவில்லை...
வாசத்தை வைத்தே
வாழ்க்கை நடத்துகிறார்கள்
இந்த வாசமில்லா மலர்கள்...
உலகமே
முன்னேற்றத்தின்
வெளிச்ச வெள்ளத்தில்..
ஆனால்,
இவர்களுக்கென்னவோ
இருட்டு இரவில்
கருப்பு பயணம் தான்..
சாகா வரம் கொடுக்கும்
அறிவியல் வந்தாலும்
இவர்களுக்கென்னவோ
சலனமற்ற முகத்தோடு
இதயத்தின்
ஒற்றைப்பாதையில்
மௌன ஊர்வலம் தான்...!
அனுதாபப் பார்வை
இலவசமாய் வழங்கிவிடலாம்..
அன்றாட வாழ்க்கைமுறை
விசாரித்தால்...
கண்ணீரின் வாசனை
தொண்டையை அடைக்கிறது..
இவர்களுக்கு
எல்லா காலமும்
இலையுதிர் காலமா??
வாழ்க்கை முழுவதும்
கண்ணா மூச்சி ஆட்டமா??
வேண்டாம்...!
தடவிப் படிக்கும்
மொழிகள் வேண்டாம்...!
தடயம் பார்க்க
விழிகள் கொடுங்கள்...!
இடறி நடக்க
ஊன்று கோல் வேண்டாம்...!
இமயம் கடக்க
பார்வை கொடுங்கள்...!
மனிதர்களே...
இறந்த பிறகு
விழிகள் கொடுங்கள்...!
சுவாசிக்கும்போதே
இவர்களுக்கு
சொர்க்கம் கொடுங்கள்..
விளக்கேற்ற வேண்டாம்...
விடியலுக்காய்
காத்துக்கொண்டிருக்கும்
உயிர்களுக்கு
விழிகள் கொடுங்கள்...
அது
ஆயிரம்
சூரியனுக்கு
சமம்...!
அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.
very nice comparisons
ReplyDeleteThanks yaar...
ReplyDelete