Sunday, April 11, 2010

சொல்லுங்கள்..

காதல்...
உலகில் ஜனிக்கின்ற
ஒவ்வொரு மனிதனும்
இறக்கின்ற வரையில்
இதயத்தில் சுமக்கின்ற
ஈர வார்த்தை!

பிறப்பில்
தொடங்கி
இறப்பில்
முடிவது
இயற்கை நியதி!

கண்களில்
தொடங்கி
கண்ணீரில்
முடிவது
காதல் நியதியா???

இங்கு
சப்தங்களெல்லாம்
சமாதியாகும்,
மௌனம் மட்டுமே
மகுடம் சூடும்...

இங்கு
நிஜங்களை விட
நிழல்களே இனிக்கும்...

ஆம்...
காதலியின்
கண்ணீர்க் கடிதம்!
காய்ந்த பிறகும்
இதயத்தில்
மணம் விசும்
அவள்
கூந்தல் பூ!
மனதைப் போலவே
உடைந்து கிடக்கும்
வளையல் துண்டுகள்!
இமைகளில்
நுழைந்து
இதயம் தொடுகின்ற
ஈரக்கனவுகள்!
இது போல...
இது போல...!

இங்கு

காரணமில்லாத
சோகங்களெல்லாம்
சோபிதம் பாடும்...

ஏரிக்கரை ஓரத்து
ஒற்றைப்
பனைமரம் போலவே
தனிமை தேடி
மனசு
தத்தளிக்கும்..!

சலனமற்ற
சன்ன அலைகள்
உயிருக்குள்
எழுந்து எழுந்து
உல் மனக்
கதவு தட்டும்!

தனிமைகளில்
இதயத்தின் எடை
இரு மடங்காகும்!
பிரிவிலும்
மனம் ஒரு
சுகம் காணும்!

கட்டில் மேல்
உடல்
கவிழ்ந்து கிடக்கும்
ஆனால்,
நினைவுகளோ
கட்டவிழ்த்துக்கொண்ட
சிட்டுக்குருவிகளாய்
பழைய சம்பவங்கள்
பல தாண்டிசிறகடித்து
அவள(ன)து
முதல் சந்திப்பில் போய்
முட்டி நின்று
மூச்சு வாங்கும்..!

தூரத்தில்
அவள்(ன்) முகம்
தெரிந்து விட்டால்
நட்டு வளர்த்த
பூச்செடி
மொட்டு விடுவதைப் போலவே
உள்மனதில்
ஒரு கோடி
வெண்
புறாக்கள்
ஓசையின்றி
சிறகசைக்கும்..!

இதயத்தின்
மூலை முடுக்கெல்லாம்
அவள்(ன்)
சிரிப்பின் எதிரொலி
அந்திகளில்
பந்திவைக்கும்...!

அதிகாலைப்
புல்லின்
பனித்துளி பொலவே
எதிலும்
ஒட்டாமல்
மனசு
அந்தரத்தில்
அத்வைதம்
காணும்...!

அவள(ன)து
ஓரப்பார்வை
ஒரு நாள்
பருகாவிட்டலும்
அன்றிரவு
விழிகள்
வேலைநிறுத்தம்
செய்யும்...!

எங்கே...
இக்தெல்லாம்
எனக்கில்லை என்று
எவரேனும்
இதயம் தொட்டு
சொல்லுங்கள்....!!!



அன்புடன்,
வசந்த் தக்ஷினாமூர்த்தி.

No comments:

Post a Comment