Tuesday, September 20, 2011

இதற்குத்தானே...

(கிராமத்தில் இருக்கும் தனது காதலியைக் காண ஓடிவரும் ஒரு நகரத்து காதலனின் முனகல்கள்...)

பல மணி நேரம்
பயணித்து
உன்
பனிமுகம் பார்க்க
வந்திருக்கிறது
இந்த பருவ நதி...


உன்
ஓர விழிப்
பார்வைக்காய்
ஓடிவந்திருக்கிறது
இந்த தென்றல்...


புல்லில் விழும்
பனித்துளி
அதன்
சல்லி வேர் தொட்டு
சந்தோஷிப்பதைப் போலவே
உன் மடியில்
முகம் புதைத்து முக்தியடைய
முகிலாய் வந்திருக்கிறான்
இந்த
முடிசூடா மன்னன்...

உனது
புன்னகைக்காய்
பூக்கனை தொடுத்து
புறப்பட்டு
வந்திருக்கிறது
இந்த புல்லாங்குழல்...

அந்தி வேளைகளில்
அழைக்காமலே ஓடிவரும்
கவிதைகைளைப் போலவே
உன் பாதத்தின்
இளஞ்சூடு காண
ஒரு தூரத்து ஜீவன்
தூறலாய் வந்து
விழுந்திருக்கிறது....


பதினெட்டு வருடம்
படுத்திருந்த
என் கண்ணீர் நதி
சொல்ல முடியாத
சோகத்தால்
பட்டென்று படிதாண்ட
உன் தோட்ட மலர்களில்
பனியாய் உறைந்திருக்கிறது
ஒரு உயிர்...


பிசுபிசுக்கும்
ஈர ரத்தத்தோடு
உள் மனதிற்குள்
அம்பு சுமந்து
உனக்காக கொஞ்சம்
உயிர் சுமந்து
ஓடோடி வந்திருக்கிறது
ஒரு ஊமைப்பறவை...


இதயம்
பாதிக்கப்பட்ட
பருவக்காற்று
நிவாரணத்திற்காய்உன்
உயிர் நோக்கி
ஊர்வலம் வந்திருக்கிறது....


இடுப்பில்
குடம் சுமந்து
இடக்கையில்
மலர் சுமந்து
நடக்கும் இளந்தளிரே...
உன் குடத்திலிருந்து
ததும்பும்
தண்ணீரைப் போலவே
உயிர் ததும்ப அழும்
ஆத்மாவின் குரல் கேட்கிறதா....


அடி பெண்ணே...
என் சன்னலோரத்தில்
ஒரு
சின்னப்பார்வை வீசு...

பன்னீர்ப்பூ
விரல் கொண்டு
என் கண்ணீர் துடை...

உன் ஈரப்பார்வையால்
இதயம் நனைத்து
கைக்குட்டையால்
தலை துவட்டு....

அந்தி நேரத்தில்
மல்லார்ந்து படுத்து
மனம் விட்டு அழ
உன் மடி கொடு...

உன் கண்ணீர்
என்
கன்னத்தில் விழ,
உன் உதடு
என்
காதுகளில் உரச
என்
தலை களைந்து
ஆறுதல் சொல்...

உன் தாவணி
பிழிந்து
என் தாகம் தனி...

உன் கூந்தல் கொண்டு
என் முகம் மூடு...

இது போதுமடி
முல்லையே...

இதற்குத்தானே
என் உயிர்
ஏங்கி ஏங்கி
இளைத்தது...
இதற்குத்தானே
என் தேகம்
இறந்து இறந்து
முளைத்தது...

இனி
இறந்தாலும்
என் சவம்
நிம்மதியாய்
எரியும்...!

அன்புடன்,
வசந்த்.

Wednesday, September 7, 2011

மௌன ராகம்...!

எல்லோரும்
வாழ்வின் அர்த்தம் புரியாமல்
ஏதோ ஒரு
தாள கதியில் ஆடிக்கொண்டிருக்க,
உன்
பாத அடிகள் மட்டும்
நிதானமாய்....

உறங்கும் நேரம் தவிர
மற்ற நேரங்களில்
மனிதர்கள்,
மன உலையின் வெப்பங்களை
விழி வழியே துப்பிக்கொண்டிருக்க
உன் விழிகள் மட்டும்
எப்போதும்
நிசப்தமாய்...

தெரியுமா உனக்கு....?
யாருமே
உன் புன்னகைக்கு
மறு புன்னகை தருவதில்லை...
ஆயினும்
யாருக்கும் நீ
மௌனப் புன்னகை
பூக்க தவறுவதில்லை...

நமக்குள்
இது என்ன பந்தம்...?
பூர்வஜென்மமா
அல்லது
பூர்வீகமா??

வியக்கிறேன்...!
எங்கு சென்றாலும்
நீ என்னை தொடர்கிறாய்...

ஆயிரம் முகங்களுக்கு
மத்தியிலும்
உன் முகத்தை மட்டும்
என் விழிகள் சட்டென்று
படம் பிடித்து விடுகின்றன...
ஆயிரம் இரைச்சல்கள்
பின்னணி இசை
சேர்த்தாலும்
உன் குரலை மட்டும்
வடிகட்டும் திறனை
என் காதுகள்
கற்றுக்கொண்டுவிட்டன...

ஒவ்வொரு முறையும்
நீ என்னை கடந்து போகையில்
உன் விழி பார்த்து
நெகிழ்வதா,
அல்லது
உன் புன்னகை பார்த்து
மகிழ்வதா
என்ற குழப்பத்திலேயே
அனிச்சை செயலாய்
என் கைகள்
சட்டைப் பையை
துழாவுகையில்
நீ கடந்தே போய் விடுகிறாய்...

என் பாசத்திற்குரியவனே....

...
பார்வையற்ற
ரயில் பாடகனே...!