Sunday, March 27, 2011

செவிகொடு...



செவிகொடு
சமுதாயமே...
உனக்கொரு
சேதி சொல்கிறேன்...!

இன்று
உனக்கொரு
சவக்குழி இனாம்...!
நாளை
உயிருடன் உள்ளே நீ...
அதன்மேல்
அரசியல்வாதியின்
பளிங்கு மண்டபம்..! 

விழித்துக்கொள் சமுதாயமே...
சலுகைகள்
உன் கண்முன்னே
தோண்டப்படும்
உனக்கான சவக்குழிகள்..!

உணர்வுகள் விற்றாய்...
உரிமைகள் விற்றாய்...
தன்மானம் விற்றாய்...
மண்மானமும் விற்றாய்...

இனி
ஏது விற்பாய் மனிதா..
இலவசங்களுக்கு....?

இனாம்
வாங்கி வாங்கியே
வளைந்து போன
உன் முதுகுத்தண்டு
இனி
நிமிரவே நிமிராதா...?

உன்
அரை வேஷ்டி உருவி
அதிலிருந்து உனக்கொரு
புதுக் கோவணம்
இனாமாம்...!
ஓடு...
இலவசக் கோவணம்
இன்றே கடைசியாம்...!

உன்
அறுவடை களவாடி
உனக்கு
ஒரு வேளை சோறு
இலவசமாம்...!
ஓடு...
புறங்கை நக்கி
புசித்துவிட்டு வா...!

நினைவில் கொள்...
கட்டிக்கொள்ள
தலைக்கொரு
அரைக்கோவனம் இனாம்,
நின்று கொள்ள
ஆளுக்கொரு
சதுரடி இனாம்,
உயிர் நனைக்க
நாளுக்கொரு
குவளைத் தண்ணீர் இனாம்...
என்ற நிலை வரும்...!

போதும்...!
இனாம் போதும்...!

உரிமை கேளுங்கள்...
நீங்கள் எஜமானர்கள்...
அவர்கள் உனது
சேவகர்கள்...
உரிமை கேளுங்கள்...

இலவசம் வேண்டாம்...
இடுங்கிப் போன கண்களுக்கு
ஒளி கேளுங்கள்...
தளர்ந்து போன தோள்களுக்கு
தன்னம்பிக்கை கேளுங்கள்...
உலர்ந்து போன வாழ்க்கைக்கு
உயிரோட்டம் கேளுங்கள்..
கரைந்து போன வளங்களுக்கு
காரணம் கேளுங்கள்...
மறைந்து போன மனிதாபிமானத்தை
மறுபடியும் கேளுங்கள்...

போதும்...!
இனாம் போதும்...!

இலவச நோய்
அடுத்த தலைமுறையினரயாவது
தாக்காமல் இருக்கட்டும்...! 

போதும்...!
இனாம் போதும்...! 

உரக்கச் சொல்லுங்கள்...
செவிகளில் ஏறவில்லையா...
உதைத்துச் சொல்லுங்கள்..!



அன்புடன்,
வசந்த்.







Saturday, March 26, 2011

ஊமைக் கனவுகள்...!


பூமி யாவும்
பூப்பூக்க வேண்டும்..
சோகமில்லா
பூபாளம் வேண்டும்..

ஜீவ நாதம்
ஊற்றாக வேண்டும்..
வானமெங்கும்
காற்றாக வேண்டும்..

ஓசை தீர்ந்த
ஒரு சந்தோஷ
சாம்ராஜ்யம் வேண்டும்..

பாஷை தாண்டி
பல சங்கீதம்
நாம் பாட வேண்டும்...

கண்ணீரே இல்லாத
பூலோகம் ஒன்று வேண்டும்...
செந்நீரே சிந்தாத
செவ்வானம் ஒன்று வேண்டும்...

ஆணும் பெண்ணும்
மட்டும் போதும் - பிற
ஜாதி மதம்
மறைய வேண்டும்...

ஆதி மழை
பொழிய வேண்டும் - மண்ணில்
போதி மரம்
வளர வேண்டும்..

பேதம்
நீங்கிவிட வேண்டும்
அன்பு வேதம்
ஓங்கி நிற்க வேண்டும்...

சாபப்
போர்க்களங்கள் யாவும்
அன்பு தீபம்
வேர் பிடிக்க வேண்டும்..

தேசம்
ஓர் குடைக்குள் வேண்டும்
எங்கும் நேசப்
பூ மலர வேண்டும்..

போதும்
வாழ்ந்த பழ வாழ்க்கை
இந்த தீது
தீப்பிடிக்க வேண்டும்..

வாழ்த்துப் பாட
தினந்தோறும்
சுக ராக
ராத்திரிகள் வேண்டும்...

பூவும்
புன்னகையும் போதும்
இந்த பூமி
ஜென்மம் பல வாழும்..!

Tuesday, March 8, 2011

எச்சரிக்கை...!

உன்
மௌனக் கண்களால்
எனை நோக்கி
புன்னகைத்து விடாதே...

மனித
இதயத்தின்
ஆயுட்காலம்
முப்பது வருடம் தான் என
மருத்துவ தீர்ப்புகள்
மாற்றி
எழுதப்பட்டு விடும்....

நிழல் வலி..!

இரண்டு
இலையுதிர்காலங்கள்
நம்
காதல் கல்லறைமேல்
இரங்கல் மலர்
தூவியாயிற்று...

அனால்,
உன்
நினைவுகள் மட்டும்
என்
நடு நிசிகளில்
நங்கூரம் பாய்ச்ச
தவறுவதில்லை....