Friday, May 21, 2010

மழை...



நீ
அவனா?
அவளா?

அவனுக்கு
அவளாகவும்,
அவளுக்கு
அவனாகவும்
உன்னால் மட்டும்
எப்படி
உருமாற முடிகிறது ???

---
---

நீ
காலன்
அனுப்பி வைத்த
காதல் மருத்துவனா??
சில்லு சில்லாய்
உடைந்துபோன
உறவுகள் கூட
சில்லென்ற
உன் வரவால்
சிலிர்த்தெழுந்து விடுகிறதே..!!

நீ
என்ன
திரவ மந்திரமா??
இதயத்தின்
அடித்தட்டில்
இறந்து கிடக்கும்
பெயர் தெரியாத
உறவின்
நினைவுகளைக் கூட
தொடாமல்
தொட்டு எழுப்பி
அவசரமாய்
ஒரு
ரகசியப்புன்னகை
பூக்கச் செய்கிறாய்...!


நீ
வானம் தெளித்துவிடும்
தியான திரவமா??
நீ
வரும்போது மட்டும்
காதலர்கள்
தன்னிலை மறந்து
நினைவுச் சிலையாகிப்
போகிறார்கள்....!!

---
---

நீ
என்ன
காயசண்டிகையின்
மாயப் பாத்திரமா??
வேரோடு விழுந்து
ஆறாக ஓடினாலும்
தீராத பந்தமாய்
மீண்டும் நீ
மழைகிறாய்!!!

---
---

பாவம்
நீயும்
பெண் தான்...
ஆம்...
கவிஞர்களுக்கு
கருவாகிக் கருவாகிக்
களைத்துப் போய்விட்டாய்...
ஆயினும்
அவர்கள் விடுவதாயில்லை...

---
---

அப்படி என்ன
உங்களுக்குள்
அந்தரங்க உறவு??
உன் பிரிவு
தாளாமல்
முகம் கருத்து
மேக மகள்
சோகமாகிப்போகிறாள்???

---
---

சமத்துவத்தின்
சாராம்சமே...!
சுயநலம் கடந்த
பொதுமனம் கொணர்ந்த
ரகசியம் சொல்வாயா??
மனிதர்களுக்கும்
அந்த
மந்திரம் சொல்வாயா??
வருணன்
வரம் கொடுத்த- அந்தத்
தருணம் சொல்வாயா...!!?

பிரபஞ்சத் தத்துவத்தை
ஒற்றைத் துளிக்குள்
எப்படி அடைத்தாய்??

குறுகக் குறுக
யோசித்து
இறுகிப் போன - மனித
இதயங்களை
எப்படி உடைப்பாய்...??


---
---


என்
முதல் ஸ்பரிசம்
நீ
எப்போது
கண்டாய்??

என்
முதல் கண்ணீர்
நீ
எப்போது
கரைத்தாய்???

உனக்கும்
எனக்கும்
நேசப்பூ
பூத்தது எப்போது???

என்
இமைக்குள் இறங்கி
எப்போது
என் இதயம் தொட்டாய்??

தொடக்கம்
நினைவில்லை...
எழுத்தை
முடிக்கவும்

மனமில்லை...

ஆயினும்
முடிக்கிறேன்...

கருவறையினை
கடந்த பின்னும்
உன்னில் தான்
நான் நனைந்தேன்...

கல்லறையை
அடைந்த பின்னும்
உன்னில் தான்
நான் நனைவேன்...

வா..
காத்துக் கொண்டிருக்கிறேன்...


அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.

Tuesday, May 11, 2010

உறக்கம்...

என்றோ
நிகழவிருக்கும்
மரண
நாடகத்திற்காய்
நித்தம்
நாம்
நடத்திப்பார்க்கும்
ஓரங்க
ஒத்திகை!