Monday, January 22, 2018

கலங்காதீர் கவிப்பேரரசே...!

காணொளி காண்கிறேன்..!

கவிப்பேரரசு 
கலங்குகிறான்..!

நெடு காலமாய் 
கவிதை  மட்டுமே பொழிந்து வந்த 
மேகம் ஒன்று 
முதன் முறையாய் 
கண்ணீர் பொழிகிறது...!

ஓங்கி முழங்குகின்ற 
ஒரு இடியின் குரல் 
இன்று 
தழுதழுத்து கேட்கிறது..!

தமிழை 
குழைத்துக் குழைத்து 
நயத்தோடு பாடிய  
எங்கள் கவிக்குயில் 
இன்று 
சுரத்தில்லாமல் கூவுகிறது..!

பரந்து விரிந்து 
தமிழ் சமைத்துக்கொண்டிருந்த 
ஒரு ஆழ்கடல்
இன்று  
சத்தமில்லாமல் 
தத்தளிக்கிறது..!

உலகத் தரத்திற்கு 
தமிழை 
உயர்த்திப் பிடித்தவனின் 
எழுதுகோல் 
உள்ளூரில் 
சில்லு சில்லாக 
உ டைக்கப்படுகிறது..!

புதுப் புது வார்த்தைகளால் 
தமிழ்த் தாயின் 
கிரீடத்தை 
அலங்கரித்தவன், 
அகல பாதாள 
அமில வார்த்தைகளால் 
அங்கீகரிக்கப் படுகிறான்..!

திரித்துப் பேசும் 
தந்திரக் காரர்களே..
உண்மை சொல்கிறேன் கேளுங்கள்..!

உலக அரங்கில் 
தமிழின் 
தற்போதைய முகவரி 
இவன் தான்..!

எழுதி எழுதியே 
பல தலைமுறைகளை 
தட்டியெழுப்பியவன் 
இவன் தான்..!

உள்ளூர் இலக்கியம் 
போதாது என 
தன் சந்ததியினருக்கு 
உலக இலக்கியத்தையும் 
சொல்லிக் காட்டியவன் 
இவன் தான்..!

இவனிலிருந்து தெறித்த 
அக்கினி வார்த்தைகளில் தான் 
எங்களது எழுதுகோல் 
தங்களை 
சாணை பிடித்துக் கொண்டது..!

இவனது 
உச்சரிப்பு தான்
தமிழை 
மீண்டும்  முடி சூட வைத்தது..!

தமிழை 
கர்வம் கலந்த அழகோடு 
உச்சரித்தவரின் 
பட்டியலில் 
இவன் பெயர் மட்டுமே 
முதலும் 
கடைசியும்..!

செவி கொடு
சமுதாயமே 
உனக்கொரு சேதி சொல்கிறேன்..!
கவிஞன் கலங்கும் 
தேசத்தில் 
கலைமகள் வசிப்பதில்லை...

ஆழமும் நீளமும் 
அகலமும் உயரமும் 
அளப்பரிய  
அடர்ந்த
இலக்கியக்  காடு இது...
சல்லி வேர் பிடுங்கி
சாய்த்துவிட முடியாது..!

வெடித்துச் சிதறும் 
எரிமலைக் குழம்பு இது..
தீக்குச்சிகள் சில 
தின்றுவிட முடியாது..!

வெற்று வார்த்தைக்காரர்களே..!
உங்கள் 
முப்பாட்டனுக்கும் மூத்த 
தமிழ்ப் பாட்டன் இவன்..!
முடிந்தால் 
இவன் 
தமிழோடு தர்க்கம் செய்யுங்கள்,
உங்கள் 
முகம் கிழியும்..!

கலங்காதீர் கவிப்பேரரசே..!
உம்மைத் தீண்டும் 
நாவை
தீக்குத் தின்னக் கொடுப்போம்..! 

பிறவா தலைமுறைகள் பல 
தலைவணங்கும் 
இறவா தமிழ் உமது..!
அறியா சிறுவர்களது பேச்சா 
உன் புகழ் குறைக்கும்??

சொன்னது நீர் தான்..!
ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு 
உலகின் வாயில் ரெட்டை நாக்கு..!
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம் 
தன நிழல் பார்த்து தானே குரைக்கும்..! 
உலகின் வாயை தைத்திடு,
அல்லது இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு..!
உலகின் வாயை தைப்பது கடினம்..
உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்..!


 --வசந்த் தட்சிணாமூர்த்தி

Tuesday, December 26, 2017

முற்றுப்புள்ளி வரை..

தேடு
மனிதா ...!

தேடலில்
நீ தொலைந்து போகக்கூடும்...!
தேடலின் பொருட்டு
உன் திசை தேதி மறக்க கூடும்..!
தேடலில்
பசி தூக்கம் இழக்க கூடும்..!
தேடலின் வாஞ்சையில்
உறவுகளை துறக்க கூடும்..!

ஆனாலும்
தேடு மனிதா..!

ஏனெனில்,
தேடல்
தீர்ந்துபோனால்,
நீ தொலைந்து போவாய்..!


தேடல் என்பது
வாழ்க்கையின் நீட்டிப்பு..!
தேடல்
வாழ்க்கையின் ஆதாரம்..!
தேடல்
வாழ்க்கையின் பொருள்..!
தேடல்
வாழ்க்கையின் சூட்ஷமம்..!

தேடல்
வாழ்க்கையின் அச்சாணி..!

தேடல் என்பது யாது....?

திரை கடல் ஓடி
திரவியம் தேடுவதா??


தன்மானம் வளைத்து
பதவி தேடுவதா??

பொய்யாய் புகழ்ந்து
கலவி தேடுவதா?

அர்த்தமற்று சிரித்து
உறவு தேடுவதா??

உயிரோடு உறைய
உன் சரிபாதி தேடுவதா??

அண்டம் அதிர்ந்து போகும்
விஞ்ஞானம் தேடுவதா?

அல்ல...
அதுவல்ல தேடல்...!

சிந்திக்க சிந்திக்க
உள்ளம் சுகிக்குமே.. அது தேடு..

ஐம்புலன்கள் உணராத
ஆறாம் சுகம் தேடு..!

 உலக ஞானம் உள்வாங்க
 புத்தகங்கள் தேடு..!

ஆறாத காயங்களை சுமக்கும்
அனுபவங்கள் தேடு...!

உருக்கும் வறுமையிலும்
சிரிப்பாயாயின்
உண்மை அது தான் உடனே தேடு..!

இறுதி மூச்சிலும்
நகைப்பாயாயின்
ஆகச் சிறந்தது அதுதான் தேடு..!

உறவின் பிரிகையில்
மௌனிப்பாயாயின்
உள்ளிருக்கும் ஞானியை விழிமூடி தேடு..!

புலனைத்தையும் திரட்டி
உயிரை கயிறாக்கி
ஏதோ செய்கையில் மகிழ்வாயே.. அது தேடு..!

வாழ்க்கைப்  புத்தகத்தின்

முற்றுப்புள்ளி
மரணம்..!

முற்றுப்புள்ளி விழும் வரை
முற்றும் தெளி..!

--
வசந்த். த

Tuesday, May 16, 2017

முத்தச் சபலம்...!


முப்பத்தியேழாம் வயதில் 
ஒரு முத்தச் சபலம்.......!!!

இரவின் நிசப்தத்தில், 
பேருந்து நிலையத்தின் 
அரையிருட்டில், 
யாரும் கவனித்திராத 
கண்ணிமைக்கும் 
தருணத்தில் 
அது நிறைவேறியது...

நீண்ட 
வருடங்களுக்குப் பின் 
என் வீடு வந்து 
ஊர் திரும்பும் 
எனது பெற்றோருக்கு 
நான் கொடுத்த 
கண்ணீர் முத்தத்தில்...!!!

-வசந்த்.

Saturday, February 18, 2012

நிஜம்...!


எப்போதும்
எனக்கு
நான் என்பது நிஜம்...!

என்னோடிருந்தவரை தான்
எனக்கு
நீ என்பதும் நிஜம்...!

எப்போதும்
வானம் நிஜம்....
வாசம் நிஜம்....
காற்று நிஜம்...
கானலும் நிஜம்....

காதலும் நிஜம் தான்....
நீ என் வாழ்வில் வந்துபோன
காலமும் நிஜம் தான்....
நாம் காதல் கொண்டு
காலம் வென்றதாய் உணர்ந்த
காட்சியும் நிஜம் தான்....
ஆனால்...
என்னோடிருந்தவரை தான்
எனக்கு
நீ என்பது நிஜம்....

பிரிந்த சில வருடங்களில்
நான் உன்னை மறந்துபோனேன்
என்பது நிஜம்...
ஆனால்...
சொல்லாமல் கொள்ளாமல்
அவ்வப்போது
என் கனவுகளில்
நீ வந்து போகிறாய்
என்பதும் நிஜம் தான்....,
என் தனிமைப் பயணங்களில்
நீ என்
நினைவு கலைக்கிறாய்
என்பதும் நிஜம் தான்....

நெருக்கமான
உதட்டு முத்த
உஷ்ண நிமிஷத்தில்
நாம் உதிர்த்த
கண்ணீர் நிஜம் தான்....
காலம்
கண்ணீரின் உயிரை ஆவியாக்கி
எஞ்சிய உப்பை
எந்திர வாழ்க்கையின்
ஏதோ ஒரு
அவசர அத்தியாயத்தில்
அஸ்தியாக்கிவிட்டது
என்பதும் நிஜம் தான்...

இடைவெளி இழந்தும்
தீண்டாத தருணங்களில் -வாய்
தாண்டாது பரிமாறிய
வார்த்தைகள் நிஜம் தான்....
கல்வெட்டுப் போல்
சொல்லிவிட்டுப் போன
வார்த்தைகளும்
தூரத்தின் இடைவெளியில்
விழுந்து மரிக்கும்
என்பதும் நித்திய நிஜம் தான்...

உருகி உருகி
உச்சி முகர்ந்ததும்,
உள்ளங்கை வியர்வையில்
முகம் புதைத்ததும்,
எதிர்பாராத கணத்தில்
மீசை முடி இழுத்ததும்
வெட்கம் முற்றுகையிட்ட பொழுதுகளில்
வானம் பாத்ததும்,
உணர்ச்சி மிகுதியில்
பொய்யாய் கோபித்ததும்...
எல்லாம் நிஜம் தான்...
உணர்ச்சிகள்
உறவுகளின் மாற்றத்தில்
உருகி உருமாறும்
என்பதும் நிஜம் தான்....

இதை
எழுதியதின் பின்னணி
முழுக்க முழுக்க
நீ தான்
என்பதும் நிஜம் தான்....
ஆனால்...
என்னோடிருந்தவரை தான்
எனக்கு
நீ என்பதும் நிஜம்....


அன்புடன்,
--வசந்த்.





Wednesday, November 23, 2011

பெண்மை...

உதடுகளின்
ஈர வெடிப்பில்
தேங்கிவிடச்
சம்மதமில்லை!

மார்பகங்களின்
மந்த வனப்பில்
தடுக்கி விழ
மனமில்லை!

கருவிழியின்
இரவுக்குள்
தொலைந்து போக
விருப்பமில்லை!

இமை விளிம்பின்
நிழலுக்குள்
இளைப்பாற
இஷ்டமில்லை!

காதோர
சன்ன ரோமத்தில்
சிக்கிக்கொள்ளும்
சிந்தனை இல்லை!

கழுத்தோர
சின்ன ஈரத்தில்
கரைந்து போக
இஷ்டமில்லை!

ஒய்யார
கன்னக் குழியில்
சுழன்று போக
சம்மதமில்லை!

உள்ளங்கை
மென்மைக்குள்
உறங்கிப் போக
விருப்பமில்லை!

நெற்றிக்
கதகதப்பில்
உருகிப் போக
உத்தேசமில்லை!

கருங்கூந்தலில்
மை கொண்டு
கவிஞனாகும்
கனவுமில்லை!

சின்னச் சின்ன
வளைவுகளில்
சரிந்து போகச்
சம்மதமில்லை!

என் ஆண்மையின் தேடல்
இவையேதும் இல்லை!
இவையேதும் தடுத்தால்
அது தேடல் இல்லை!
இவைதாண்டி கிடைத்தால்-
அவள்,
என் தேடலின் எல்லை!


அன்புடன்,
வசந்த்.

Tuesday, November 15, 2011

உங்களுக்காக...

தன்னந்தனி விதை முளைத்து
வயலையேவா நிறைத்து விடும்...?
ஒற்றைத்துளி மழை விழுந்து
ஊரையேவா நனைத்து விடும்...?

இருந்தாலும் எழுதிடறேன்...
யாருக்கோ அழுதிடறேன்...

மலைபோல விஞ்ஞானம்
மளமளன்னு வளந்தாலும்
நம்பிக்கையோட சேர்ந்து - மூட
நம்பிக்கையும் வளருதுங்க...

அக்கம் பக்கம் சுத்திப் பாத்தா
பல கூத்து நடக்குதுங்க
ஒன்னு ரெண்டு சொல்லுறேங்க
உங்களுக்கும் சேத்துதாங்க...

மனுஷன் செஞ்ச பாவத்துக்கு
ஆடு கோழி அருக்குறாங்க
சாமியோட செல கழுவ
ரத்தக்கொடம் தூக்குறாங்க...

உசுருள்ள ஜீவ ராசி
ஒவ்வொன்னும் சாமிதாங்க
உசுருக்குள் புதஞ்சிருக்கும்
நெசஞ்சாமி அன்புதாங்க...

புள்ள குட்டி அத்தனையும்
பட்டினியால் தவிக்குதுங்க
பொண்டாட்டி தாலி வச்சு
போலி பூஜ நடக்குதுங்க...

ஒன்னு ரெண்ட கூட்டிப் பாத்து
ஒம்பதால கழிக்குறாங்க
ஆத்தா வச்ச அழகு பேர
சூத்திரத்தால் மாத்துறாங்க...

எண்ணுக்குள்ளே ஒண்ணுமில்லே
எழுதி நானும் தாறேனுங்க
எண்ணத்தோட உழைப்பிருந்தா - தல
எழுத்து கூட மாறும் போங்க...

வட்ட ரேகை புள்ளி ரேகை
வாழ்க்கை நிலை சொல்வதில்லை
விலங்கினங்கள் ஏது ஒன்றும்
ஆயுள் ரேகை பார்ப்பதில்லை...

பச்சக் கல்லு மோதிரத்தால்
பணங்காசு சேராது
சிறுநீரக அடைப்புக்கல்ல
செவப்புக் கல்லு கரைக்காது...

நேரங்காலம் பாக்காம
வேர்வ சிந்த திட்டம் போட்டா
கப்பல் கூட காலடியில்
எப்படி நான் வெளங்க வப்பேன்...
தன்னந்தனி விதை முளைத்து
வயலையேவா நிறைத்து விடும்...?
ஒற்றைத்துளி மழை விழுந்து
ஊரையேவா நனைத்து விடும்...?

இருந்தாலும் எழுதிடறேன்...
யாருக்கோ அழுதிடறேன்...


அன்புடன்,
வசந்த்

Tuesday, September 20, 2011

இதற்குத்தானே...

(கிராமத்தில் இருக்கும் தனது காதலியைக் காண ஓடிவரும் ஒரு நகரத்து காதலனின் முனகல்கள்...)

பல மணி நேரம்
பயணித்து
உன்
பனிமுகம் பார்க்க
வந்திருக்கிறது
இந்த பருவ நதி...


உன்
ஓர விழிப்
பார்வைக்காய்
ஓடிவந்திருக்கிறது
இந்த தென்றல்...


புல்லில் விழும்
பனித்துளி
அதன்
சல்லி வேர் தொட்டு
சந்தோஷிப்பதைப் போலவே
உன் மடியில்
முகம் புதைத்து முக்தியடைய
முகிலாய் வந்திருக்கிறான்
இந்த
முடிசூடா மன்னன்...

உனது
புன்னகைக்காய்
பூக்கனை தொடுத்து
புறப்பட்டு
வந்திருக்கிறது
இந்த புல்லாங்குழல்...

அந்தி வேளைகளில்
அழைக்காமலே ஓடிவரும்
கவிதைகைளைப் போலவே
உன் பாதத்தின்
இளஞ்சூடு காண
ஒரு தூரத்து ஜீவன்
தூறலாய் வந்து
விழுந்திருக்கிறது....


பதினெட்டு வருடம்
படுத்திருந்த
என் கண்ணீர் நதி
சொல்ல முடியாத
சோகத்தால்
பட்டென்று படிதாண்ட
உன் தோட்ட மலர்களில்
பனியாய் உறைந்திருக்கிறது
ஒரு உயிர்...


பிசுபிசுக்கும்
ஈர ரத்தத்தோடு
உள் மனதிற்குள்
அம்பு சுமந்து
உனக்காக கொஞ்சம்
உயிர் சுமந்து
ஓடோடி வந்திருக்கிறது
ஒரு ஊமைப்பறவை...


இதயம்
பாதிக்கப்பட்ட
பருவக்காற்று
நிவாரணத்திற்காய்உன்
உயிர் நோக்கி
ஊர்வலம் வந்திருக்கிறது....


இடுப்பில்
குடம் சுமந்து
இடக்கையில்
மலர் சுமந்து
நடக்கும் இளந்தளிரே...
உன் குடத்திலிருந்து
ததும்பும்
தண்ணீரைப் போலவே
உயிர் ததும்ப அழும்
ஆத்மாவின் குரல் கேட்கிறதா....


அடி பெண்ணே...
என் சன்னலோரத்தில்
ஒரு
சின்னப்பார்வை வீசு...

பன்னீர்ப்பூ
விரல் கொண்டு
என் கண்ணீர் துடை...

உன் ஈரப்பார்வையால்
இதயம் நனைத்து
கைக்குட்டையால்
தலை துவட்டு....

அந்தி நேரத்தில்
மல்லார்ந்து படுத்து
மனம் விட்டு அழ
உன் மடி கொடு...

உன் கண்ணீர்
என்
கன்னத்தில் விழ,
உன் உதடு
என்
காதுகளில் உரச
என்
தலை களைந்து
ஆறுதல் சொல்...

உன் தாவணி
பிழிந்து
என் தாகம் தனி...

உன் கூந்தல் கொண்டு
என் முகம் மூடு...

இது போதுமடி
முல்லையே...

இதற்குத்தானே
என் உயிர்
ஏங்கி ஏங்கி
இளைத்தது...
இதற்குத்தானே
என் தேகம்
இறந்து இறந்து
முளைத்தது...

இனி
இறந்தாலும்
என் சவம்
நிம்மதியாய்
எரியும்...!

அன்புடன்,
வசந்த்.