Monday, April 12, 2010

அந்த நாட்கள்...

கல்லூரி...!
உச்சரிக்கும்போதே
உடல் சிலிர்க்க,
நந்தவனமே அல்லவா
உயிர்த்தெழுந்து
புன்னகை
பூக்கிறது...!

கல்லூரி நினைவுகள்
இரவுக் கனவுகளில் கூட
இமைகளில் அல்லவா
வேர்பிடித்து விடுகிறது...!

பாலைவனத்தில்
திடீரென்று
பீறிட்டெழுகின்ற
நீரூற்றைப் போலவே
பதினேழாம் வயதின்
பசுமைச் சம்பவங்கள்
கல்லூரிப் பொழுதுகளே..!

கல்லூரிக் காலங்கள்,
நினைவுப்பக்கங்களில்
நீந்திக் கிடக்கின்ற
கண்ணீர்க் கவிதைகள்...

இதயப் புல்வெளிகள்
ஈரம் சுமக்கும்
பழைய கனவுகள்...

நினைத்தவுடன்
இமைகள் கசியும்
இனியப்பொழுதுகள்...!

ஏரியைக் கண்டுவிட்ட
அரபு நாட்டுக்காரன்
அதிலிருந்து
ஏறி வர மனமின்றி
இதயம் தவிப்பானே..,
அது போலத்தான்
கல்லூரி
நினைவுகளும்...

இந்த அவசர
வாழ்க்கையை
அவசரமாய்
ஒதுக்கி வைத்துவிட்டு,
பதுக்கி வைத்திருந்த
பழைய நினைவுகளை
புரட்டிப்பார்க்கிறேன்...!

கல்லூரிக்
கடைசி நாள்...

தேன் மட்டுமே
சுரந்து கொண்டிருந்த
சின்னப்பூக்கள்
கண்ணீர் சுரந்த
அந்த பன்னீர் நாள்...!

முடிந்து போன
நிகழ்வுகளை
முடிபோட்டு முடிபோட்டு
முகம் பார்க்க முடியாமல்
மூலைக்கொன்றாய்
சில கூட்டம்...!

அழுகின்ற
கண்களுக்கு
ஆறுதல் சொல்ல முடியாமல்,
திரும்பி நின்று
கண் துடைக்கும்
திராணியற்ற
சில கூட்டம்...!

கல்லூரி வளாகத்தில்
பனித்துளி போல்
சிதறி அமர்ந்து,
மழைத்துளி போல்
கதறி அழுதது
இதயத்தின்
ஆழத்தில்
இன்னும் மிதக்கிறது...!


பனித்துளி தாங்கி
கனத்து வரும்
தென்றலைப் போலவே
விழித்துளியின்
சுமை தாங்காமல்
இதயம் கனக்கிறது...!

ஆனாலும்,
கொஞ்சம்
இனிக்கிறது...!


அன்புடன்,
வசந்த் தக்ஷினாமூர்த்தி.


No comments:

Post a Comment