(இது
வெண் காவியமல்ல...!
பெண் காவியம்...!)
தங்கத்திற்கு எதற்கு
தங்க மகுடமென
ஒற்றை முத்துக்காய்
நாங்கள்
முக்குளிக்கையில்
சொல்லாமல்
போய்விட்ட
சொக்கத்தங்கமே...
இதோ,
உனக்கு
என் தமிழ் மகுடம்...!
அன்னையே...
ஒரு ஜோடிக்
கண்களை வைத்துக்கொண்டு
பல கோடி மக்களுக்காய்
கண்ணீர் விட்ட
வெள்ளை மலரே...
நீ எங்கிருக்கிறாய்...?
தும்பைப் பூ
உடை தரித்த தூயவளே...
அன்பிற்காய்
நிறம் துறந்த தூரிகையே...
அன்பின்
அமுத சுரபியே..
நீ எங்கிருக்கிறாய்??
உலகத்து உயிர்களுக்காய்
பிச்சிப்பூ விரல் கொண்டு
பிச்சைப் பாத்திரம் ஏந்தி,
எச்சிலை கூட
ஏகாந்தமாய் ஏற்றுக்கொண்ட
அன்பின்
அட்சயப் பாத்திரமே..
நீ எங்கிருக்கிறாய்??
சொர்க்கத்தில்
கண்ணீர் துடைக்க
நீ சொல்லாமலே
போய் விட்டாயா...?
பாரஞ்சுமக்கவே
புறப்பட்டு வந்த
பாரிஜாதமே...!
உயிர் சுமை
தாங்கித் தாங்கியே
உலகத்து ஞானங்கண்டவளே...!
புல்லின்
பனிச் சுமையைக் கூட
பொறுக்க மாட்டாமல்
இதயம் கசியும்
ஈர பூபாளமே..
உனக்காக நாங்கள்
உயிர் கசிகிறோம்...!
எங்களது
ஒற்றைக்குடையை
களவாடிய
காலனே...
உனைக் கண்டிக்கிறேன்...
புன்னகைத்துப்
புன்னகைத்தே
எங்கள் உயிருக்குள்
பூப்பூக்கச் செய்தவளை
திருப்பிக்கொடு....
பார்வைகளாலேயே
இப் பிரபஞ்சத்தின்
அழுக்கை
வெளுக்க வந்த
வெள்ளை நதியை
திருப்பிக்கொடு....
அன்னையே...
உன் பிரிவு தாளாமல்
எங்கள் உயிர்களெல்லாம்
அனுமதி இல்லாமலேயே
அஹிம்சைத் தற்கொலை
செய்து கொள்கின்றன...
வந்து விடு..!
நீ வந்து விடு...!
நீ மழைத்துளியாய்
விழப்போகும்
அந்த மணித்துளி சொல்...
ஓடோடி வந்து
உனைத் தாங்க
நாங்கள் உயிர் விரிக்கிறோம்..
நீ தென்றலாய்
வீசப்போகும்
திசை தெரிவி...
எங்கள்
ஆத்மா திறந்து
உன்னை நிரப்பிக் கொள்கிறோம்...
ஆம்..
உன்னை
உயிருக்குள்
நிரப்பிக் கொள்கிறோம்...!
அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.
No comments:
Post a Comment