இது உள்ளிருக்கும் எனது சரணங்களுக்காய் படிக்கட்டுகளிலேயே இந்தப் பனித்துளி பாடிக்கொள்ளும் பல்லவி வரிகள்!!
எனது இதயத்தோட்டத்தில் விழப்போகும் விமர்சன மழைக்காய், முகத்துவாரத்திலேயே ஒரு வானம்பாடியின் மேகதூதம்!
நனையப்போகும் உங்கள் மனதை முன் கூட்டியே மலர் கொண்டு துவட்டியனுப்பவே இந்த முன்னேற்பாடு!
வைகறை விடியலை வரவேற்க சின்னப்பூக்களெல்லாம் வண்ண இதழ்களில் பனி சுமப்பதைப் போலவே, வாசக இதயங்களை வாசனையுடன் வரவேற்க இந்தச் சின்னப் பறவை சிறகு விரிக்கிறது!
சரிந்து விழும் அருவியின் அருகில் அமர்ந்து கொண்டும், மலைப்பூக்களின் மடியில் கொஞ்சம் மறைந்துகொண்டும், சருகு உதிரும் சப்தத்தினை ரசித்துக்கொண்டும் கவிதை எழுதவே பிரியம். ஆனால், இங்கு பூபாளம் சுமந்து வரும் பூங்காற்றுமில்லை, ஊதாப்பூ கொண்டு மாராப்பு மூடும் மலையடிவாரமும் இல்லை...!
காதில் கேட்பதெல்லாம் கார்ச்சத்தமும், கார்கில் யுத்தமும் தான்... ஆயினும் தயக்க நடைபோடும் தங்க வார்த்தைகளுக்கு தவம் செய்து கன்னித்தமிழில் கவி இயற்றவே ஆசைப்பட்டிருக்கிறேன்...
சிலர் அமுத மழை பொழிந்தாலும், பலரது அமில மழை கடந்தே இந்த ஓடை பயணித்திருக்கிறது...
இந்த நத்தை ஊர்ந்து ஊர்ந்து வந்து தன முதுகுச் சுமையை முனகல்களாய் இங்கு இறக்கி வைத்திருக்கிறது...
மனதிற்குள் ஒவ்வொரு முறையும், மழை அடிக்கின்ற மாலைப் பொழுதிலும், துயரங்களால் துரத்தப் படுகின்ற இருட்டு இரவுகளிலும் தமிழின் மடியில் தான் நான் தலை சாய்த்திருக்கிறேன்...
உள்ளே சொல்லியிருப்பதெல்லாம், கடல் தாண்டி ஓடும் கம்பனது கற்பனைகளோ, வாழ்க்கையை புரட்டிப் போடும் வாசகங்களோ அல்ல...
இந்தச் சின்ன இதயத்தில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு கொடுத்திருக்கும் எழுத்து வடிவம்... அவ்வளவுதான்...
ஒருவேளை,
நான் ஓவியனாய் இருந்திருந்தால், இதே உணர்ச்சிகளை என் தூரிகை பேசியிருக்கும்...
என்றும் அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.
nice intro.
ReplyDeleteThanks Viji....
ReplyDelete