Friday, June 13, 2025

முடிவிலி...


தொடக்கமும் இல்லாமல் 
முடிவும் இல்லாமல் 
ஒரு சூஃபி பாடலை போலவே 
உனது ஞாபகங்கள் 
உள்மனதின் ஆழத்தில் 
ஒலித்துக்கொண்டே இருக்கிறது..!

உன் நினைவலைகளை நீந்தி 
ஜென் மனநிலையில்
நிகழ் காலத்தின் 
கரை தொடுகையில் 
நெடு நீண்ட நா கொண்ட 
உன் ஞாபகப்  பாம்பு  
எனை விருட்டென்று சுருட்டி
மீண்டும்  
உள்ளிழுத்துக் கொள்கிறது..!

உன் ஞாபக அதிர்வுகளால்  
நிசப்த தருணத்தில் 
மெல்ல மொட்டவிழும் 
என் எழுதுகோல் 
சிறகு முளைத்த வானவில்லாய் 
வண்ண வண்ணமாய் 
சிந்திச் சிதறி 
காற்றின் வெளியில் 
சுற்றித் திரிந்து 
இருட்டின் ஓவியம் போலவும் 
ஊமையின் பாடல் போலவும்
மீண்டும் என்னுள் 
மௌனமாய் மறைகிறது..

-வசந்த் தட்சிணாமூர்த்தி

No comments:

Post a Comment