Friday, June 13, 2025

மன்னியும் பாரதி..!


நீரின்றி அமையாது 

இவ்வுலகு - பாடினான் வள்ளுவன்..
பெண் - நீயின்றி அமையாது  
எவ்வுலகும் - பாடுகிறேன் சின்னவன்..

கவனம் தேவை 
கன்னியரே...

ஓடுகின்ற நதிக்கெல்லாம் 
உன் பெயர் தான்..
பொறுமை காக்கும் 
பூமித்தாய்க்கும் நின் திருப்பெயர் தான்..

பூக்கள் ஜாதி அத்தனைக்கும் 
தலைமை நீ தான்.. 
கவிதைப் புயல் மையம் கொள்ளும் 
புள்ளியும்  நீ தான்..

அழகியலின் ஒட்டுமொத்த 
வடிவமும் நீ தான்..
வாய் திறவா சிரம் நிமிரா 
யாவையும் நீதான்..

கவனம் தேவை 
கன்னியரே 
வஞ்சகமாய்  புகழ்வதிலே   
மிஞ்சியவர் ஆடவர்கள்..

"ஆணுக்கு பெண் நிகர்"
மன்னிக்கவும் பாரதி..
சிரம் தாழ்த்தி 
மறுக்கின்றேன்..

விதையும் நிலமும் 
எங்ஙனம் சமம்?
விதைக்க மட்டுமே தெரிந்தவன் 
கருவின் சுமையை  
எப்படி அறிவான்?

பொருளும் பொறுப்பும் 
எப்படி சமம்?
வேட்டை மட்டுமே ஆடுபவன்  
இல்லச்  சுமைகள் 
எப்படி அறிவான்?

அறிவும் அன்பும் 
எவ்வாறு சமம்?
வான சாஸ்திரங்கள் அளந்தவன் 
பிள்ளை வளர்ப்பை  
எப்படி அறிவான்?

கடமையும் கருணையும் 
எப்படி சமம்?
எல்லைகள் அற்றதல்லவா 
கருணைக் கடல்??

சரி...
முன்பு 
அவன் மட்டுமே உழைத்தான்...
அவன் மட்டுமே சிந்தித்தான்...
அவன் எழுத்து மட்டுமே அச்சானது..
அவன் பேசசு மட்டுமே மேடையேறியது..
அவன் மட்டுமே வரலாறானான்..

சற்று உற்று நோக்கும் 
அக்கினிக் கவிஞனே..

வருணனைகளின் கட்டுடைத்து
விண்வெளியின் 
மையத்தில் பெண்ணினம்..

அழகியலின் திரை கிழித்து
அறிவியலின் 
சிகரத்தில் பெண்ணினம்..

கலைகளுக்கு மட்டுமே 
என்ற தடை உடைத்து 
கணினியிலும் கல்வியிலும் பெண்ணினம்..

மரபுகளின் வலை அறுத்து
யாவற்றிலும்
நிரம்பி நிற்கும் பெண்ணினம்..
  
காய்கறி வெட்ட மட்டுமே  
கத்தி பிடித்த கைகள் 
போர்த்தொழில் புரியவும் 
கற்றுக்கொண்டு விட்டன..

இல்லம் தரணி 
இரண்டையும் ஆளும் 
வல்லமை கொண்டது 
பெண்ணினம்.. 

ஒற்றைத் துளி அருந்தி 
உயிர் வாழவும் 
சமுத்திரம் கடந்து 
கரையேறவும் 
சூத்திரம் அறிந்தது 
பெண்ணினம் மட்டுமே..

ஆகவே பாரதி...

பெண் - ஆடவனுக்கு நிகரில்லை.. 
ஆண்டவனுக்கு நிகர்..!

No comments:

Post a Comment