புத்தகக் கடைகளுக்குள்
நுழைகிறேன்...
செவிக்கு எட்டாத
பல்லாயிர முனகல்கள்
வெவ்வேறு ஓசைகளில்
வெவ்வேறு தாளகதியில்
மனதை கனக்கச் செய்கின்றன..
பெரும் கூச்சல்..
பேரமைதி..
மௌன விம்மல்கள்..
விட்டு விட்டு
தொடர்ச்சியாக
அறைக்குள்
மிதந்து கொண்டேயிருக்கின்றன..
கூர்ந்த கவனிப்பிற்குப் பின்
புரிந்தது,
அவை
பாலிதீன் உறைகளுக்குள்
சிறை வைக்கப் பட்டுள்ள
புத்தகங்களின்
புலம்பல்கள்..
பிஞ்சுக் குழந்தைகளின்
மூச்சுத் திணறல்கள்..
விடுதலை கோரும்
கண்ணீர் விசும்பல்கள்..
தங்களின்
மறுக்கப்பட்ட
சுதந்திரத்திற்கான
மன்றாடல்கள்...
தனக்கும்
வாசகனுக்கும்
இடையில் உள்ள
தடையை
தகர்க்க முயலும்
அகிம்சை கூக்குரல்கள்...
தன்னை
எடுப்போரின்
கைகளில்
ஸ்பரிசம் தொட்டு
தவழத் துடிக்கும்
மழலை கெஞ்சல்கள்...
கைகொணர்வோர்
புரட்டிப் பார்த்து
தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற
தனிமை தத்தளிப்புகள்...
விற்பனையாளர்களே..
விரல் பட்டால்
விலை போகாதென்று
புத்தகங்களின்
கழுத்தை நெறிக்காதீர்கள்..
அவைகள்
சுவாசிக்க விரும்புகின்றன.
-வசந்த் தட்சிணாமூர்த்தி
No comments:
Post a Comment