Friday, June 13, 2025

வகுப்பறை வணங்கு...


மூன்று அறைகளை 
உன் வாழ்நாளில் 
நீ கட்டாயம் 
கடந்து போவாய் மனிதா..

முதல் அறை 
கருவறை..
மூன்றாம் அறை 
கல்லறை..
இடைப்பட்ட காலங்களில் 
வகுப்பறை..!

கருவறையின் நினைவுகள் சுமக்க 
உன் ஞாபகக் கிடங்கில் 
வசதியில்லை..
ஆனால்,
வகுப்பறையின் நினைவுகள் சுமக்க 
உன் ஞாபகக் கிடங்கு போதாது..

உனது சந்தோஷத்தில் சிரித்து 
உனது சோகத்தில் அழுது 
உனது துக்கத்தை பகிர்ந்து 
உனது அறிவை வளர்த்ததால், 
தாய் தந்தையரைப்  போலவே 
வணங்க வேண்டிய பந்தங்களில் 
வகுப்பறையும் ஒன்று...!

சிலர் நினைக்கலாம், 
பாவம்
மெத்தப் படித்தவனுக்கு 
சித்தம் கலங்கிற்று என்று..

வகுப்பறைக்கு உயிரா..?
கட்டிடங்களில் கண்களில் 
கண்ணீரா?
நாற்காலிகளெல்லாம் 
சிநேகம் கொள்ளுமா?

அனால்,
கேள் மனிதா..!
தனிமையில் 
வகுப்பறை திறந்து 
உற்று கவனி..
உதிர்ந்து கிடக்கும் 
ஞாபகச் சருகுகளின் 
சத்பம் உணர்வாய்..
வகுப்பறை சேமித்து வைத்த 
சப்த அலைகளில் 
நீ தடுக்கி விழுவாய்..
ஒவ்வொரு மேசையும் 
ஒரு கதை சொல்லும்..
ஜன்னல் கதவுகளெல்லாம் 
ஜாடை பேசும்..
கரும்பலகைளெல்லாம் 
பல கவிதை சொல்லும்..

கசக்கி எறியப்பட்ட 
காகிதங்கள் போலவே 
உன் நினைவுகள் 
சிதறிக் கிடக்கும்...

ஓட்டமும் நடையுமாய் 
மூச்சிரைத்த சில நாள்..
பேருந்தை தவறவிட்டு 
தாமதித்த சில நாள்..
அவசர ஓட்டத்தில் 
செருப்பறுந்த ஒரு நாள்..
அம்மாவோடு சண்டையிட்டு 
சோகத்தோடு ஒரு நாள்..
நண்பனோடு கோபித்து  
தள்ளியமர்ந்த சில நாள்..
வாலிபக் கிறுக்கேறி 
மயங்கி கிடந்த சில நாள்..
பாடச்சுமை தாளாமல் 
தளர்ந்து கிடந்த சில நாள்..
வறுமை உன்னை கசக்கிப் பிழிய 
வாடிக் கிடந்த சில நாள்..
வாழ்க்கைப் பாடம் 
கற்றுத் தெளிந்ததாய் 
மெத்தனம் கொண்ட சில நாள்...

வகுப்பறை கூட 
கருவறை தான்..!
ஆனால், ஆச்சரியம், 
பல குழந்தைகளுக்கு 
ஒரே தொப்புள் கொடி..!
ஒரே நேரத்தில் 
இருபதுக்கு மேற்பட்ட  பிரசவம்..!

கருவறையில் கூட 
உனது வாசம் 
எட்டோ, பத்தோ 
மாதக் கணக்கில் தான் மனிதா..!

ஆனால்,

வகுப்பறையில் தான்
மூன்றில் ஒரு பகுதி 
உன் ஆயுள் கழிக்கிறாய்...!

வகுப்பறை 
வணங்கு மனிதா..!
கருவறையினும் 
வகுப்பறை சிறந்தது..!

ஏனெனில்,

கருவறையில் 
நீ குழந்தையாகிறாய்..!
ஆனால்,
வகுப்பறையில் தான் 
நீ மனிதனாகிறாய்..!

--
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.

No comments:

Post a Comment